மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணைய தளத்தை கடந்த ஜூன் மாதம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே உள்ள இணையதளத்தில் இருந்த அம்சங்களை விட இதில் பல மேம்பட்ட சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய இணையதளத்தை பயன்படுத்தி 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரியை இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்துள்ளனர். இந்த தளத்தின் மூலம் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
வங்கி டெபாசிட்களுக்கான வட்டியில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது, எவ்வளவு வரி செலுத்த வேண்டியது உள்ளது போன்ற அனைத்து விவரங்களையும் இந்த புதிய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். வருமான வரி தாக்கல் செய்தவர்களின் படிவங்கள் இணையதளம் மூலமாகவே சரி பார்க்கப்படுகிறது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் மூலம் ‘ஓ.டி.பி.’ எண் வழங்கப்பட்டு இது சரிபார்க்கப்படுகிறது. இந்த சரிபார்ப்பு முடிவடைந்ததும் திரும்ப கிடைக்க வேண்டிய வரி பிடித்தம் அவர்களது வங்கி கணக்கில் தாமதம் இல்லாமல் செலுத்தப்படுகிறது.
கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் விரைந்து வருமான வரி தாக்கல் செய்ய அறிவுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.