புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர்.அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024) பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கான அடித்தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் களம் இறங்கும் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் தமிழகத்தில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கூட்டணி விவகாரத்தில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தார்கள்.
ஏனெனில் தான் விரும்பிய உடன்பாட்டுக்கு சம்மதிக்காவிட்டால் தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதற்கு உதாரணம் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்.
பிரதமர் மோடி நல்ல நண்பராக இருந்தும் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் ஜெயலலிதா தனித்து தேர்தலை சந்தித்தார். ‘மோடியா? இந்த லேடியா?’ என்று நேருக்கு நேர் சவால் விட்டார். அதில் இமாலய வெற்றி பெற்று சாதித்தார். அதாவது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. கூட்டணி விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கும், சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.
2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியைத் தான் சந்தித்தார்கள். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையவில்லை. அ.தி.மு.க. 66 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக மாறியது.
ஆனால் பா.ஜனதா முதல் முறையாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது வெற்றி கணக்கை தொடங்கியது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்ந்தாலும் இணக்கமான மனநிலையில் இல்லை என்பதே உண்மை. தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துப்போனாலும் கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் தான் வெற்றி பெற முடியவில்லை என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
அது மட்டுமல்ல ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்துவதோடு பாராளுமன்ற தேர்தலில் கணிசமான எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது.
பா.ஜனதாவுக்கு தலைவராக பொறுப்பேற்ற இளம் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையும் அதற்கு ஏற்ற வகையில் அதிரடியாக அரசியல் களத்தில் காய்களை நகர்த்தி வருகிறார்.
தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதாதான். இப்போதைய எதிர்க்கட்சியும் பா.ஜனதா தான் என்று பேசும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்கி இருப்பது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்கள் 24 பேர் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வார்கள் என்று அண்ணாமலை பேசி வருவது அ.தி.மு.க.வை கூடுதல் கலக்கமடைய வைத்துள்ளன.
இந்த நிலையில் தான் அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் ஆவேசமாக மோதி வருகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜனதா இல்லாத வலுவான கூட்டணியை உருவாக்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முயன்று வருகிறார்.
இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி அமைத்தும், தனித்து போட்டியிட்டும் எதிர்பார்த்த அளவுக்கு பா.ம.க.வால் சாதிக்க முடியாமல் போனது.
இப்போது கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அன்புமணி தனது தலைமையில் கட்சியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். அதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே தி.மு.க. அணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. எனவே பா.ஜனதா இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் பா.ஜனதா அதிருப்தி ஓட்டுகள், தி.மு.க. அதிருப்தி ஓட்டுகள் இரண்டையும் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கருதுகிறார்.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற போதே இருவரும் இந்த விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.
கம்யூனிஸ்டு கட்சியினரும் பா.ஜனதா அல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.