புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் – அமெரிக்க அதிபர் பேச்சு
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன், தலைநகர் வார்சாவில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்ட காலத்துக்கு தொடரக்கூடும். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட வேண்டும். கடவுள் அருளால் இந்த மனிதர் (புதின்) ஆட்சியில் நீடிக்க கூடாது. அவர் அதிகாரத்தில் இருக்க முடியாது. புதின் ஒரு கசாப்புக் கடைக்காரர். உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிர்க்கிறது என தெரிவித்தார். பைடனின் இந்த கருத்துக்கு ரஷியா கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் முன்மொழிவை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் எனது கருத்துகளுக்கு பின்வாங்கவில்லை. நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் (ரஷிய அதிபர் புதின்) அதிகாரத்தில் இருக்கக் கூடாது. உங்களுக்குத் தெரியும், கெட்டவர்கள் தொடர்ந்து கெட்ட செயல்களை செய்யக்கூடாது என குறிப்பிட்டார்.