இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா, ரகானே ஆகியோர் நீக்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருவரையும் தேர்வுக்குழு கழற்றி விட்டது. புஜாராவின் கடைசி 16 டெஸ்ட் சராசரி 27.93 ஆகும். 7 அரை சதம் மட்டுமே அடித்தார். ரகானேவுக்கு 15 ஆட்டத்தில் சராசரி 20.25 ஆகும். இதில் 3 அரை சதம் அடங்கும்.
இந்தநிலையில் புஜாராவும், ரகானேவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரகானேவும், புஜாராவும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். தென் ஆப்பிரிக்க தொடரில் செஞ்சூரியோ அல்லது 80 முதல் 90 ரன்கள் வரை எடுத்திருந்தால் நிலைமை மாறுபட்டு இருக்கும்.
ரகானே ஒரு டெஸ்டில் சிறப்பாக ஆடினார். ஆனால் அது போதுமான ரன் கிடையாது. அணியை பொருத்தவரை அவரிடம் இருந்து ரன்களை அதிகம் எதிர்பார்த்தது.
இருவரையும் ரஞ்சி போட்டியில் விளையாடுமாறு தேர்வுக்குழு அறிவுறுத்தி உள்ளது. ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடினாலும் அவர்களால் இந்திய அணிக்கு மீண்டும் நுழைய இயலாது.
200 முதல் 250 ரன்கள் வரை எடுத்தால் அணிக்குள் நுழையலாம். ஆனால் தற்போது இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்தியா ஒரே ஒரு டெஸ்டில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது. அதன் பிறகு உலகக்கோப்பை வந்து விடுகிறது.
நவம்பர்- டிசம்பருக்கு பிறகுதான் டெஸ்ட் நடைபெறும். அப்போது அவர்கள் 35 வயதை தொட்டு விடுவார்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் புஜாராவும், ரகானேவும் அணிக்கு மீண்டும் திரும்புவது கடினமே.
இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.
புஜாரா 95 டெஸ்டில் 6713 ரன் எடுத்துள்ளார். சராசரி 43.87 ஆகும். 18 சதமும், 32 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 206 ரன் குவித்துள்ளார்.
ரகானே 82 டெஸ்டில் 4931 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.52 ஆகும். 12 சதமும், 25 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 188 ரன் குவித்துள்ளார்.