புஜாராவிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் – டீன் ஜோன்ஸ்
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்தியா விரைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியபோது, புஜாரா அணியை சரிவில் இருந்து மீட்டார். 246 பந்துகள் சந்தித்து 123 ரன்கள் அடிக்க இந்தியா 250 ரன்களை தொட்டது. 2-வது இன்னிங்சிலும் 200 பந்துகளுக்கு மேல் சந்தித்து அரைசதம் விளாசினார். இவரது ஆட்டத்தால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அவர்கள் எப்படி நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை புஜாராவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலியா வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளரும் ஆன டீன் ஜோன்ஸ் இதுகுறித்து கூறுகையில் ”புஜாரா தனது ஆட்டத்தை எப்படி நகர்த்தி செல்கிறார் என்பதை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கவனிக்க வேண்டும். எனது அப்பா என்னிடம், “நீ ஐந்து மணி நேரம் பேட்டிங் செய்தால், சதம் உன்னைத்தேடி வரும்” என்பார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் அவசரப்படுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 6 பேரில் பெரும்பாலானோர் அனுபவம் இல்லாதவர்கள். உஸ்மான் மட்டும்தான் முதல்தர போட்டிகளில் 40-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ஆனால் இந்தியாவில் டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்கள் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்கள்.
சதம் எப்படி அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். புஜாராவை போல் எப்படி நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். நாதன் லயனை எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
பெர்த் ஆடுகளம் பந்தின் மீது சிராய்ப்பு ஏற்படும்போது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும். அதேபோல் சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் குறித்து ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட்டிற்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அதில் கவனம் செலுத்துவார்கள்.
முகமது ஷமியும் சிறப்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்வார். இதனால் அவர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். புதிய ஆடுகளம் பழைய வாகா பிட்ச் போன்று இருக்காது. ஸ்லோ டென்னிஸ் பால் பவுன்ஸ் இருக்கும்.” என்றார்.