பீகார் ரெயில் விபத்து எதிரொலி – 10 ரெயில்கள் ரத்து
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் விபத்து குறித்து அறிந்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதற்கிடையே, ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக, அந்த வழியாக செல்லும் பாட்னா-பூரி எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்பர்க் எக்ஸ்பிரஸ், பரவ்னி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.