Tamilசெய்திகள்

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் – வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பீகார் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு வழங்க ஏதுவாக சானிடைசர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதன்பின்னர் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுகிறது.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்கின்றனர். மத்திய மந்திரி கிரிராஜ் சிங், லக்கிசராய் மாவட்டம் பர்ஹையா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

71 தொகுதிகளில் போட்டியிடும் 1066 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படி அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக வாக்காளர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பீகார் மக்கள் தங்கள் வாக்குரிமையை தவறாமல் நிறைவேற்றும்படி ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார். சிறந்த எதிர்காலம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறி உள்ளார்.