பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடையை உள்ளது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவிக்கிறோம். பீகாரில் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பீகார் சட்டமன்றத்தில் 243 உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதில் 38 இடங்கள் எஸ்சி வகுப்பினருக்கும், இரண்டு இடங்கள் எஸ்.டி. வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.2 கோடியில் இருந்து 7.2 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தம் 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இருப்பினும், இது இடதுசாரி ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது. ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்கள் என்று இருந்ததை இப்போது 1000 வாக்காளர்களாக குறைத்துள்ளோம்.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools