பீகாரீல் கழிவுநீர் கால்வாயில் கட்டு கட்டாக பணம் – போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன. இதை பார்த்த சிலர் கால்வாய்க்குள் இறங்கி அந்த மூட்டையை பிரித்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது.

உடனே கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கால்வாய்க்குள் இறங்கினர். அவர்கள் போட்டி போட்டு கொண்டு கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர். கழிவுநீரையும் பொருட்படுத்தாமல் அதில் மிதந்த 2000, 500, 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றனர். அந்த ரூபாய் நோட்டுக்கள் உண்மையானது என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

அதிகாலையில் வாகனத்தில் வந்த சிலர் பண மூட்டையை கால்வாயில் வீசி சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூபாய் நோட்டுக்கள் உண்மையானதா? என்பது உறுதியாக தெரியவில்லை. அந்த ரூபாய் நோட்டுகளை கால்வாயில் வீசி சென்றது யார்? என்று தீவிரமாக விசாரணை நடக்கிறது. கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools