பி.வி.சிந்துவுக்கு ஆந்திர முதல்வர் வாழ்த்து

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை எதிர் கொண்டார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய பி.வி. சிந்து முதல் சுற்றில் முன்னிலை வகித்தார்.

பின் இறுதியில் 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை 42 ஆண்டுகளுக்கு பிறகு பி.வி.சிந்து. சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது வாழ்த்துக்களை பி.வி.சிந்துவுக்கு தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்துச் செய்தியில், ‘வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. இந்த இறுதிப் போட்டியின் தொடக்கம் முதலே சிந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

இறுதியில் ஒரு சாம்பியனை போல விளையாடி, உண்மையான சாம்பியனாகவே பட்டத்தை வென்றார்’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, ‘விளையாட்டில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும்போது, அது நல்ல பலனையே தரும்.

சிந்துவின் இந்த வெற்றி வருங்கால வீரர், வீராங்கனைகளை ஊக்குவிப்பதாக அமையும். பி.வி.சிந்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news