Tamilவிளையாட்டு

பி.வி.சிந்துவிடம் வருத்தம் தெரிவித்த ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு

பிலிப்பைன்சில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து 2-வது செட்டில் 14-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது போட்டி நடுவர் சிந்துவுக்கு ஒரு புள்ளியை அபராதமாக விதித்தார். அதாவது அந்த புள்ளி எதிராளி கணக்கில் சேர்க்கப்பட்டது. சர்வீஸ் செய்ய சிந்து அதிக நேரம் எடுத்து கொண்டதாக கூறி நடுவர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

எதிராளி தயாராக இல்லாததால் சர்வீஸ் செய்யவில்லை என்று சிந்து கூறிய விளக்கத்தை நடுவர் ஏற்க மறுத்து விட்டார். நடுவரின் முடிவை எதிர்த்து தலைமை நடுவரிடம் அப்பீல் செய்தும் பலன் இல்லை. அதன் பிறகு விரக்தியில் ஆடிய சிந்து அந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார்.

தனக்கு இழைக்கப்பட்ட தவறான தண்டனை குறித்து சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் மற்றும் ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் ஆசிய போட்டியில் நடுவரின் தவறான முடிவுக்கு ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் சிக் ஷின் சென், சிந்துவிடம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சிந்துவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ‘எதிர்பாராதவிதமாக அந்த நேரத்தில் நடுவர் செய்த தவறை திருத்த முடியவில்லை. இருப்பினும் இதுபோன்ற மனித தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.