Tamilசெய்திகள்

பி.எஸ்.இ நர்சிங் பாடப்புத்தகத்தில் வரதட்சணை குறித்த சர்ச்சை பாடம் – மகராஷ்டிரா எம்.பி கண்டனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பி.எஸ்.இ. நர்சிங் 2-ம் ஆண்டு பாடப்புத்தகத்தில் வரதட்சணை தொடர்பாக பாடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடத்தில், அழகு இல்லாத பெண்கள் திருமணம் செய்வதற்கு வரதட்சணை உதவுகிறது என்று பொருள்படும் வகையில் கூறப்பட்டுள்ளது. நர்சுகளுக்கான சமூகவியல் என்ற பாடநூலில் ஆசிரியர் டி.கே.இந்திராணி இந்தப் பாடத்திட்டத்தை எழுதி உள்ளார்.

இந்தப் பாடம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பாடத்துக்கு சிவசேனா பெண் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதானுக்கு புகார் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு பாடப்புத்தகத்தில் உள்ள பாடம் வரதட்சணை முறையின் நன்மைகளையும், தகுதியையும் விவரிக்கிறது. நன்மைகள் என்று கூறப்பட்டுள்ள பகுதியில் அழகு இல்லாத பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு வரதட்சணை உதவும் என்று ஆசிரியர் கூறியுள்ளார்.

அதிக வரதட்சணை கொடுக்கும் அத்தகைய பெண்களை அழகான மற்றும் அழகு இல்லாத ஆண்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியும் என்று அந்த பாடம் குறிப்பிடுகிறது. பெண்களின் உடல் பண்புகளைப் பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர வரதட்சணை தொடர்பாகவும் அவர் அப்பகுதியில் கூறியுள்ளார்.

வரதட்சணை கொடுமை காரணமாக பல பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கியுள்ளனர். பெண்கள் படித்துவிட்டு வேலைக்கு செல்லும்போது வரதட்சணைக்கான தேவை குறைவாக இருக்கும். எனவே பெண்களுக்கு கல்வி புகட்டுவது என்பது, மறைமுகமாக சாதகமாக அமையும்.

இதுபோன்ற பாடங்களைப் பாடப்புத்தகத்தில் இடம்பெற செய்யக்கூடாது. வரதட்சணையின் சிறப்புகளை விவரிக்கும் ஒரு பாடநூல் உண்மையில் எங்கள் பாடத்திட்டத்தில் உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தப் பாடத்திட்டத்தை உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும். வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் ஒரு குற்றச்செயலாக இருக்கும் நிலையில் இதுபோன்ற கருத்துக்கள் நிலவுவது மிகவும் துரதிருஷ்டமானது.

பாடப்புத்தகங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான பிரசாரம் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அனைத்துப் பாடங்களையும் ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

இதுபோன்ற பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் இத்தகைய பிற்போக்கான பண்புகளுக்கு ஆளாகிறார்கள். இதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற வரதட்சணை முறையை ஆதரிப்பது அனைவரையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.