’பிஸ்கோத்’- திரைப்பட விமர்சனம்
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான ‘பிஸ்கோத்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படம் எப்படி என்பதை பார்ப்போம்.
சந்தானத்தின் தந்தை சிறிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தை மிகப்பெரிய நிறுவனமாக்கிஅதற்கு தனது மகனை முதலாளியாக்க வேண்டும், என்று ஆசைப்பட்டவர், எதிர்பாரத விதமாக திடீரென்று மரணமடைகிறார். அவர் ஆசைப்பட்டது போலவே அவரது பிஸ்கட் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து விடுகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் முதலாளியாக அல்லாமல், சாதாரண தொழிலாளியாக அந்நிறுவனத்தில் சந்தானம் வேலை செய்கிறார்.
தனது தந்தை ஆசைப்பட்டது போல், பிஸ்கட் நிறுவனத்தின் முதலாளியாக முடியவில்லையே, என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தானத்திற்கு காதல் கைகூட, அப்படியே கதை சொல்லும் பாட்டி ஒருவரும் அறிமுகமாகிறார். அந்த பாட்டி சொல்லும் வரலாற்று கதைகளில் நடப்பது போல, சந்தானத்தின் வாழ்க்கையிலும் நடக்க, அதனால் அவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், திடீர் திருப்பங்களும் தான் படத்தின் மீதிக்கதை.
எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அது சந்தானம் படம் என்றால் ரசிகர்களின் முதல் எதிர்ப்பார்ப்பு காமெடியாக தான் இருக்கும். சந்தானமும் தனது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு காமெடியில் தாராளம் காட்டுவார். அப்படி தாராளத்தை காட்டுவதோடு, அதை கதையோடு பயணிக்க வைத்திருப்பது தான் ‘பிஸ்கோத்’ படத்தின் தனி சிறப்பு.
தான் பேசும் எளிமையான வசனங்கள் மூலமாகவே ரசிகர்களை சிரிக்க வைக்கும் சந்தானம், படத்தில் இளமையாகவும் இருக்கிறார். பழைய படங்களின் கெட்டப்புகளில் வருபவர், சில இடங்களில் அந்த கதாப்பாத்திரங்களை கலாய்க்கும் காட்சிகளில் அசத்துகிறார். அதே சமயம், மற்றவர்கள் கஷ்ட்டப்படக் கூடாது என்று பல இடங்களில் அடக்கியும் வாசித்திருக்கிறார்.
தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், அவர்களது காட்சிகளும், தேவையும் குறைவு தான். இருப்பினும், கொடுத்த வேலையை அம்மணிகள் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
வில்லன் வேடமா அல்லது காமெடி வேடமா, என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடையும் அளவுக்கு ஆனந்தராஜின் வேடம் அமைந்திருக்கிறது. பரத் ரெட்டி, மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா மனோகர், சிவசங்கர் மாஸ்டர், சவுகார் ஜானகி என படத்தில் நடித்த அனைவரின் வேடமும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.
இசையமைப்பாளர் ரதனும், ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரமும், கதைக்கு ஏற்ப பயணித்துள்ளார்கள். கச்சிதமாக கத்திரி போட்டிருக்கும் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, சில முக்கிய காட்சிகளையும் தெரியாமல் வெட்டி விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது. இருந்தாலும் இயக்குநர் சொல்ல நினைத்த பிரம்மாண்டத்தை சுறுக்கமாக சொல்லி முடித்திருக்கிறார்.
கமர்ஷியல் இயக்குநர் ஆர்.கண்ணன், இளைஞர்களுக்காக மட்டும் அல்லாமல், குடும்பமாக திரையரங்கிற்கு வருபவர்களுக்கும் ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். இரண்டு மணி நேரம் நம்மை, நாம் மறந்துவிட்டு சிரித்து ரசிக்க கூடிய விதத்தில் காட்சிகள் இருக்கின்றன.
சில குறைகள் படத்தில் இருந்தாலும், கொரோனா பாதிப்பால் சிரிப்பதையே மறந்து போகும் நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் மக்கள், தங்களது கவலைகளை சில மணி நேரங்கள் மறக்க வேண்டும் என்றால் ‘பிஸ்கோத்’ படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில், ‘பிஸ்கோத்’ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றதாக உள்ளது.