போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள் என்றும் இதன்மூலம் இந்த பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த போப் பிரான்சிஸ், வாடிகனின் நீதி மற்றும் அமைதிக்கான துறையின் 2ம் நிலை தலைவராக சகோதரி அலீஸ்ஸாந்தரா ஸ்மெரில்லி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார்.