Tamilசெய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்!

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு தடைவிதித்தது.

தடையை மீறி பிளாஸ் டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்களும், அதனை வாங்கி பயன்படுத்தும் கடைக்காரர்களும் தமிழக அரசின் உத்தரவை மதிக்கும் வகையில் சில நாட்கள் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தனர். இதன் பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் வழக்கம்போல பயன்பாட்டுக்கு வந்தன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு முழுமையாக அபராதம் விதிக்கப்படவில்லை. அதனால் அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. பல இடங்களில் அதிகாரிகள், கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்தனர்.

இதனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்து இடங்களிலுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் தடையை முழுமையாக முழுவீச்சில் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு நாளை (17-ந்தேதி) முதல் அபராதம் வசூலிக்கும் முறை தீவிரமாக தொடங்கப்பட உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதனை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக அதனை வாங்கி பயன்படுத்துபவர்கள், சிறிய கடைக்காரர்கள், கடைசியாக பொதுமக்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கும் வகையில், தனித் தனியாக அபராத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களுக்கு அபராத கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவது முதல் முறை கண்டறியப்பட்டால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

2-வது முறையில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருளை தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதன்பிறகும் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு சீல் வைக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ வினியோகம் செய்தாலோ முதலில் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதன்பிறகு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

வணிக ரீதியாக பயன்படுத்துவோருக்கு முதலில் ரூ.25 ஆயிரமும், 2-வது முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

சிறிய பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ரூ.100-ம், 2-வது முறை ரூ.200-ம், 3-வது தடவை ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகளின் கடைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வீடுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும்போது முதல் முறையாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் ஒரு வீட் டில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தால் அபராத தொகை ரூ.1000-மாக உயர்த்தி வசூலிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதற்காக அதிகாரிகள் அதிரடி வேட்டைக்கு தயாராகி வருகிறார்கள். சென்னையில் 15 மண்டலங்களில் இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் சென்னை மாநகர் முழுவதும் நாளை வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் சென்னையில் 240 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *