பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 9 ஆம் தேதி வழங்கப்படும் – தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு, மறு கூட்டல் நாளை முதல் தொடங்குவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. உடனடி தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.