தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95.01 சதவீதம், நாமக்கல் 94.97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.