X

பிலிப்பைன்ஸ் நாட்டில் போலி மதுபானம் குடித்து 9 பேர் பலி!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கண்டிருப்போம். அது உண்மை என்றாலும் பலர் அதை பொருட்படுத்துவது இல்லை. பண்டிகைக் காலங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஆனால் போலியான மதுபானங்களை அருந்துவதாலும், அளவுக்கு அதிகமாக அருந்துவதாலும் சில சமயம் நாம் குடிக்கும் மது நம் உயிரை குடித்து விடுகிறது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் லாகுவானா மாகாணத்தில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

லாகுவானா மாகாணத்தில் நேற்று பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மது அருந்திய சுமார் 140 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலியான மதுவை அருந்தியதால் இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். இதே போல் குவேசான் மாகாணத்தின் கேண்டலேரியா நகரைச் சேர்ந்த ஒருவரும் போலியான மதுவை அருந்தியதால் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் கோமா நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

போலியான மதுவை தயாரித்து விற்பனை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.