பிலிப்பைன்ஸில் 317 இலங்கை அகதிகள் சென்ற கப்பல் நடுக்கடலில் தவிப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் கடல் வழியாக படகு, கப்பல் மூலம் செல்கிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை அகதிகளை ஏற்றி சென்ற கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. இலங்கையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 317 பேர் ஒரு கப்பலில் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கப்பல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது.
இதனால் கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் நடுக்கடலில் தத்தளிக்கிறது. இதற்கிடையே கப்பலை இயக்கியவர் அதிலிருந்து குதித்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் எப்படி தப்பினார் என்ற விவரம் தெரிய வில்லை. இதனால் கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
நடுக்கடலில் தத்தளிக்கும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் நடுக்கடலில் சிக்கி இருப்பது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.