அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரியானா சிறையில் இருந்து வரும் ராம் ரஹீமுக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தேரா சச்சா ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பரோல் கேட்டு குர்மீத் விண்ணப்பித்திருந்தார். அதன்படி 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு இன்று அதிகாலை 6.30 மணியளவில் குர்மீத் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை குர்மீத் ராம் ரஹீம் கொண்டாட உள்ளதாக தெரிகிறது. கடத்த கடந்த 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 232 நாள்கள் குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், பிறகு ஜூலை, நவம்பர், மீண்டும் 2024ஆம் ஆண்டு ஜனவரி என முறையே 40 நாள்கள், 30 நாள்கள், 21 நாள்கள், 50 நாள்கள் பரோலில் குர்மீத் வெளியே வந்தார் அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளுர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரியாக ராஜஸ்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 வார பரோலில் குர்மீத் வெளியே வந்தார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 40 நாள் பரோலில் குர்மீத் வெளிவந்த நேரம் சரியாக அரியானா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற காலகட்டம் ஆகும். கடந்த 2022 பிப்ரவரியில் 21 நாள் பரோலில் அவர் வெளிவந்த காலகட்டம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த சமயம்., அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியே வந்தது அரியானா உள்ளாட்சித் தேர்தல் சமயம். அதே அக்டோபரில் அரியானா இடைத்தேர்தலின்போது வந்தார்.
2020 அக்டோபரில் அரியானா சட்டமன்ற தேர்தலின்போது வெளியே வந்தார். தற்போது காஷ்மீர், அரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கும் சமயத்தில் வெளியே வந்துள்ளார்.