இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி, தயாரித்து, வினியோகித்து வருகிற கொரோனா தடுப்பூசி கோவேக்சின் ஆகும். இந்த தடுப்பூசி நமது நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அந்நாடு கோவேக்சின் தடுப்பூசி 2 கோடி ‘டோஸ்’களுக்கு ‘ஆர்டர்’ வழங்கியது.
இதற்காக பிரேசில் நாட்டு அரசுடன் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. மேலும் இந்த தடுப்பூசியின் ஒழுங்குமுறை அனுமதி, வினியோகம், காப்பீடு, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்காக பிரேசிலில் உள்ள பிரீசிசா மெடிக்கமெண்டோஸ் மற்றும் என்விக்சியா பார்மசியூடிகல்ஸ் நிறுவனத்துடன் பாரத் பயோடெக் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
ஆனால் கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவேக்சின் தடுப்பூசிக்கான ஆர்டரை பிரேசில் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுத்தி விட்டது.
அதைத்தொடர்ந்து, பிரீசிசா மெடிக்கமெண்டோஸ் மற்றும் என்விக்சியா பார்மசியூடிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.
அதே நேரத்தில் இந்த தடுப்பூசியின் ஒழுங்குமுறை அனுமதி பெறுவதற்காக நாங்கள் தொடர்ந்து பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பான அன்விசாவுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அறிவித்தது.
இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை பிரேசில் அரசு நிறுத்திவிட்டது. இது தொடர்பாக பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு அன்விசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.