Tamilசெய்திகள்

பிரேசில், ஈரான் உள்ளிட்ட 16 நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பது கோவேக்சின் தடுப்பூசி ஆகும்.

இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார் உருவாக்கி தயாரித்து வினியோகித்து வருகிறார்கள்.

இந்த தடுப்பூசிக்கு இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ், ஈரான், மெக்சிகோ உள்ளிட்ட 16 நாடுகளில் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ள பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* உலகமெங்கும் உள்ள 50 நாடுகளில் அவசர பயன்பாட்டு அனுமதி தொடர்பான செயல்முறைகள் நடைமுறையில் உள்ளன.

* கோவேக்சின் தடுப்பூசிகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கூடுதல் சப்ளைக்கான கோரிக்கைகள் வந்துள்ளன.

இதற்கிடையே கோவேக்சின் தடுப்பூசியின் 2 கோடி டோஸ்களை கொள்முதல் செய்வதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தததை பிரேசில் அரசு நேற்று திடீரென நிறுத்தி வைத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:-

* கடந்த ஆண்டு நவம்பரில் பிரேசில் சுகாதார அமைச்சகத்துடனான முதல் சந்திப்பு நடந்தது. இந்த ஜூன் மாதம் 29-ந்தேதி முடிந்தது. ஒப்பந்தம் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் என 8 மாதங்களாக படிப்படியான அணுகுமுறை பின்பற்றப்பட்டது.

* ஒப்பந்தங்கள், ஒழுங்குமுறை ஒப்புதல்கள், வினியோகங்கள் ஆகியவற்றில் உலகின் பிற நாடுகளுடன் பின்பற்றிய அதே அணுகுமுறைதான் பிரேசிலுடனும் நடந்தது. உலகமெங்கும் கோவேக்சின் தடுப்பூசி வினியோகம் வெற்றிகரமாக நடைபெறுகிறது.

* பிரேசிலில் அவசர கால பயன்பாட்டு அனுமதி ஜூன் 4-ந் தேதி கிடைத்தது. ஜூன் 29-ந் தேதி நிலவரப்படி, பாரத் பயோடெக் நிறுவனம் எந்த முன்பணமும் பெற வில்லை. பிரேசில் சுகாதார துறைக்கு தடுப்பூசி வினியோகமும் செய்யப்படவில்லை.

* இந்தியாவுக்கு வெளியே உள்ள பிற நாடுகளின் அரசுகளுக்கு கோவேக்சின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு விலை 15-20 டாலர்கள் என தெளிவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலுக்கும் ஒரு டோசுக்கு 15 டாலர் (சுமார் ரூ.1,125) என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.