‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘களிமண் தரையின் ஹீரோ’வான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் தகுதிநிலை வீரர் செபாஸ்டியன் கோர்டாவை (அமெரிக்கா) விரட்டியடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
நடப்பு சாம்பியனான நடால் பிரெஞ்ச் ஓபனில் பதிவு செய்த 97-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 3-6, 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் ஜானிக் சினெரிடம் (இத்தாலி) பணிந்தார். தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் கால்இறுதியில் நடாலுடன் மோதுகிறார்.