X

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – அரையிறுதியில் நடால், பெடரர்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 26-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் கோன்டா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபனில் இங்கிலாந்து மங்கை ஒருவர் அரைஇறுதியில் அடியெடுத்து வைப்பது கடந்த 36 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ‘இது எனது சிறந்த செயல்பாடுகளில் ஒன்று. உண்மையிலேயே என்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று கோன்டா மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அவர் அடுத்து பெட்ரா மார்டிச் (குரோஷியா) அல்லது வோன்ட்ரோசோவாவை (செக்குடியரசு) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.

ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 11 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் ஜப்பானின் நிஷிகோரியை பந்தாடி அரைஇறுதியை எட்டினார். ‘களிமண் தரை’ களத்தில் மின்னல் வேகத்தில் மட்டையை சுழட்டிய நடாலுக்கு 3-வது செட்டில் மழை குறுக்கிட்டு முட்டுக்கட்டை போட்டது. இதனால் அவர் வெற்றியை தாமதமாக ருசிக்க வேண்டியதாகி விட்டது.

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6 (7-4), 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான வாவ்ரிங்காவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 35 நிமிடங்கள் நீடித்தது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு வந்துள்ள பெடரர் அடுத்து தனது பரம போட்டியாளரான நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். நடாலுக்கு எதிராக இதுவரை 38 முறை மோதியுள்ள பெடரர் அதில் 15-ல் மட்டுமே வெற்றி கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Tags: sports news