பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறிய நடால்
கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 9-ம் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார். அதிரடியான ஷாட்டுகளினால் ஸ்வியாடெக்கை திணறடித்த சக்காரி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றியை ருசித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் கிரீஸ் வீராங்கனை ஒருவர் அரைஇறுதியை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் பிரெஞ்ச் ஓபனில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வெற்றி கண்ட ஸ்வியாடெக்கின் வீறுநடை முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டம் 1 மணி 35 நிமிடங்கள் நீடித்தது. ‘வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நிலையை எட்டியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன்’ என்று 20 வயதான சக்காரி கூறி உணர்ச்சிவசப்பட்டார்.
மற்றொரு கால்இறுதியில் 33-ம் நிலை வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். முதல் செட்டில் கிரெஜ்சிகோவா 0-3, 3-5 என்ற வீதம் பின்தங்கி இருந்த போதிலும் அதில் இருந்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி எழுச்சி பெற்றார்.
இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் சக்காரி- கிரெஜ்சிகோவா, அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா)- தமரா ஜிடன்செக் (சுலோவேனியா) ஆகியோர் மோதுகிறார்கள். இந்த 4 பேரும் இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாமில் அரைஇறுதிக்கு வந்தது கிடையாது. எனவே இவர்களில் ஒருவரை முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் மகுடம் அலங்கரிக்கப்போகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 14-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (7-3), 7-5 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரர் டெனில் மெட்விடேவை(ரஷியா) விரட்டியடித்தார். சிட்சிபாஸ் அரைஇறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.