X

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஸ்வியாடெக், முச்சோவா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், சபலெங்கா, கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார். இதில், 7-6, 6-7, 7-5 என்று 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று சபலெங்காவை வீழ்த்தி முச்சோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா. மற்றொரு ஆட்டத்தில், பிரேசில் வீராங்கனை பீட்ரில் ஹாடட் மையாவை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.