Tamilவிளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி – ரபேல் நடால் எதிர்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் சோபியா கெனினும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ஆண்கள் பிரிவில் டொமினிக் தீமும் (ஆஸ்தி ரியா), பெண்கள் பிரிவில் நமோமி ஒசாகாவும் (ஜப்பான்) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த போட்டி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

பிரெஞ்சு ஓபன் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடந்தது.

ஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நடாலின் இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13-வது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 12 தடவை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.