4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) முதல் தடையை கடக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அவர் தன்னை எதிர்த்த பெல்ஜியத்தின் டேவிட் கோபினை 6-3, 5-7, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி 37 நிமிடங்களில் சாய்த்தார்.
இதே போல் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 4-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் ஜிரி வெஸ்லியை (செக்குடியரசு) தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிட்சிபாசுக்கு 3 மணி 13 நிமிடங்கள் தேவைப்பட்டது. கரென் கச்சனோவ் (ரஷியா), கோகினாகிஸ் (ஆஸ்திரேலியா), ரடு அல்போட் (மால்டோவா), செபாஸ்டியன் அப்னெர் (ஆஸ்திரியா), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் மார்டா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சபலென்கா அடுத்து சக நாட்டவரான தகுதி நிலை வீராங்கனை ஷியாமனோவிச்சை சந்திக்கிறார்.
மற்ற ஆட்டங்களில் நடியா போடோராஸ்கா (அர்ஜென்டினா) 6-0, 6-2 என்ற நேர் செட்டில் ஜெசிகா போன்செட்டையும் (பிரான்ஸ்), மேக்டலினா பிரெச் (போலந்து) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் சூவாய் ஜாங்கையும் (சீனா), பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 6-1, 6-4 என்ற செட்டில் விக்டோரியா ஹிரன்காகோவாவையும் (சுலோவக்கியா) ஊதித்தள்ளினர். அதே சமயம் 8-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி (கிரீஸ்) 6-7 (5-7), 5-7 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் கரோலினா முச்சோவாவிடம் (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.