இங்கிலாந்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.
ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.
‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்விகளை சந்தித்ததால், தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்புகள் அனைத்தும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஓட்டெடுப்பு தெரசா மேவுக்கு கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால் இங்கிலாந்து, ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.