பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் இருந்து வீனஸ் வில்லியம்ஸ் விலகல்!
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக இது கருதப்படுவதால் சர்வதேச வீராங்கனைகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இத்தொடரில் விளையாடுவதற்காக ரஷியாவின் மரியா ஷரபோவாவிற்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக பின்னடைவு ஏற்பட்டதால் துரதிர்ஷ்டவசமாக பிரிஸ்பேனில் தொடரில் பங்கேற்க முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
வீனஸ் வில்லியம்ஸ்க்கு பதிலாக மாற்று வீராங்கனை யார் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் நாளை அறிவிக்கின்றனர்.
வருகிற 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் முன்னணி வீராங்கனைகளான ஆஷ்லே பார்ட்டி, நவோமி ஒசாகா உள்பட முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.