பிரியாணி சாப்பிட சென்றவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் கொள்ளை!

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 32). பால் மற்றும் பேப்பர் போடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாலவாக்கம் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ.1½ லட்சத்தை எடுத்தார். அதை தனது இருசக்கர வாகன இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

செல்லும் வழியில் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட கிருஷ்ணசாமி, இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பிரியாணி சாப்பிட கடைக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மர்ம ஆசாமி அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பழைய குற்றவாளியான வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த சிட்டிபாபு (42) என்பவரை கைது செய்தனர். இவர், கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகன பெட்டியை திறந்து பணத்தை திருடியது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools