குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் இப்போது சிக்கன் பிரியாணி எனப்படும் கோழி இறைச்சி பிரியாணி முக்கிய இடம் பெறுகிறது. பிரியாணி என்றால் அதில் லெக்பீஸ் எனப்படும், பெரிய இறைச்சித் துண்டு இருக்க வேண்டும். அது இல்லாத பிரியாணி, குஸ்காவாகிவிடும். ஒரு திருமணவிழாவில் லெக்பீஸ் இல்லாமல் பிரியாணி வழங்கப்பட்டதால் பெரிய ரகளையே ஏற்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் நேற்று முன்தினம் அந்த திருமண விழா நடந்தது.
அப்போது மணமகன் வீட்டாருக்கு வழங்கப்பட்ட விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் சிலருக்கு லெக்பீஸ் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லையாம். இதனால் வாலிபர்கள் அதை பிரச்சினையாக்கினர். முறையிடலாக தொடங்கிய பிரச்சனை வாக்குவாதம், கைகலப்பாக வளர்ந்து களேபரமானது. ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையும் கோதாவில் இறங்கி, தங்கள் தரப்பினருக்காக சண்டையிட ஆரம்பித்தார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பலருக்கும் அடி உதை விழுந்தது. அப்போது சிலர் நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.
இந்த மோதலை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதுபற்றிய காட்சிகள் வைரலாக பரவியது. ஆனால் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. வலைத்தள காட்சிகளை பார்வையிட்ட போலீசார், புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.