ஜம்மு-காஷ்மீர் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரியங்கா சோப்ரா பகிரங்கமாக ஆதரித்ததால் சில நாட்களுக்கு முன்பு, ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ரா ஜோனாஸை நீக்கக்கோரி பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி யுனிசெப்பிற்கு ஒரு கடிதம் எழுதினார்.
அவர் அந்த கடிதத்தில் “ஐ.நா யுனிசெப் அமைதிக்கான நல்லெண்ண தூதராக நீங்கள் நியமித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் பிரச்சினை குறித்து உங்கள் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறேன். பிரியங்கா சோப்ரா இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்துள்ளார், மேலும் பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அணுசக்தி அச்சுறுத்தலையும் ஆதரித்துள்ளார்” என கூறி இருந்தார்.
இப்போது, பாகிஸ்தானின் கடிதத்திற்கு பதிலளித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “யுனிசெப் நல்லெண்ண தூதர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் பேசுகிறார்கள், அவர்கள் ஆர்வமுள்ள அல்லது அக்கறை கொண்ட பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.
அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது செயல்கள் யுனிசெப்பின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் யுனிசெப் சார்பாக பேசும்போது, அவர்கள் யுனிசெப்பின் சான்றுகள் சார்ந்த பக்கச்சார்பற்ற நிலைப்பாடுகளை கடைபிடிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.