Tamilசெய்திகள்

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேருக்கு அலர்ஜி

பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியது.

இந்நிலையில் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்றும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியால் அலர்ஜி ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும், ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.