X

பிரிக்க முடியாத வகையில் இளையராஜா இசையுடன் இணைந்திருக்கிறேன் – தேவி ஸ்ரீ பிரசாத்

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சென்னையில் புதிய மியூசிக் ஸ்டூடியோ தொடங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று பார்வையிட்டார். இதுபற்றி தேவி ஸ்ரீ பிரசாத் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிலில் கூறி இருப்பதாவது:-

இளையராஜா இசையையும் என்னையும் பிரிக்க முடியாது ‘ஒரு சிறு குழந்தையாக, இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்குள் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது. நான் எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசையுடன் வளர்ந்தேன். பிரிக்க முடியாத வகையில் நான் அவருடைய இசையுடன் இணைந்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற கனவை எனக்குள் விதைத்ததும் அவரது இசைதான்.

‘நான் இசையமைப்பாளராக மாறி எனது சொந்த ஸ்டூடியோவை உருவாக்கியதும் அதில் இளையராஜாவின் பெரிய புகைப்படம் ஒன்றை மாட்டினேன். அந்த புகைப்படத்தின் முன் இளையராஜாவுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இளையராஜா ஐயா என்னைப் பார்க்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு.

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நமது உண்மையான ஆசைகள் மற்றும் அன்பை நிறைவேற்றக் கூடியது. அதன்படி இறுதியாக எனது இந்த கனவு நனவாகியது, குறிப்பாக எனது குருவான ஸ்ரீமாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணா பிறந்த நாளில் என்னுடைய கனவு நினைவாகி உள்ளது. நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று. இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா, உங்கள் வருகைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.