Tamilசெய்திகள்

பிரான்ஸ் ஈபிள் டவரின் உச்சியில் குடிபோதையில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும். திறப்பதற்கு முன்னதாக பாதுகாவலர்கள் கோபுரத்தில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அப்போது, அமெரிக்கர்கள் இரண்டு பேர் கோபுரத்தின் உச்சியில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அமெரிக்க பயணிகள் இருவரும் அதிகளவில் மது அருந்தி இருந்ததால், கோபுரத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு இடையே பொதுவாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் இரவு முழுவதும் உறங்கியுள்ளனர். ஆனால், இருவரும் எந்தவொரு வெளிப்படையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணியளவில் நுழைவுச் சீட்டுக்கு பணம் செலுத்திய பிறகு, கோபுரத்தின் உச்சியில் இருந்து படிக்கட்டுகளில் ஏறும்போது இருவரும் பாதுகாப்பு தடைகளைத் தாண்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இருவரையும் மீட்பதற்காக சிறப்பு பிரிவு உள்பட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த சம்பவத்தால், பொது மக்களின் பார்வைக்காக ஈபிள் கோபுரம் திறப்பதில் ஒரு மணி நேரம் தாமதமானது.