புதுமுகங்கள் வர்மன், நேகா நடிப்பில், அறிமுக இயக்குநர் அகரம் கமுரா இயக்கத்தில், ஆர்.பி.பாண்டியன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘பிரான்மலை’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.
பிரான்மலை என்ற ஊரில் வாழும் பெரிய மனிதரான வேல ராமமூர்த்தி, போலீஸுக்கு உத்தரவு போடும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவராக இருப்பதோடு, வளர்க்கும் ஆடுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், உடனே வெட்டி சமைத்துவிடும் அளவுக்கு முரட்டு குணம் கொண்டவராகவும் இருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருபவர், சரியாக பணம் கட்டாதவர்களின் குடும்பத்தையே தனது வீட்டில் சிறை வைக்கும் அளவுக்கு வில்லங்கமான ஆளாகவும் இருக்கிறார். இவரது இளையமகனான ஹீரோ வர்மன், அப்பாவை போல அடாவடி வழியை கடைபிடிக்காமல், நண்பர்கள், சிறுவர்கள் என அனைவரிடமும் அன்பாக பழகுபவர். தனது ஊருக்கு வரும் சமூக சேவை குழுவில் இருக்கும் ஹீரோயின் நேகாவின் மனிதாபிமான குணத்தை பார்த்து, அவர் மீது காதல் கொள்வதோடு, ஹீரோயினிடம் வம்பு இழுப்பவர்களை துவைத்தெடுக்கிறார். இது அவரது அப்பாவுக்கு தெரியவர, பையனை இப்படியே விட்டால் சரிபடாது என்று நினைத்து தனது உறவினர்கள் இருக்கும் கரூருக்கு போகச் சொல்கிறார்.
அப்பாவின் சொல்படி தனது ஊரை விட்டு கிளம்பும் வர்மன், கரூருக்கு செல்லாமல் தனது நண்பர் பிளாக் பாண்டி இருக்கும் கோவைக்கு வர, அங்கே ஹீரோயின் நேகாவை சந்திக்கிறார். தனது காதலை நேகாவிடம் வெளிப்படுத்த, அவரும் வர்மனை காதலிக்க தொடங்குகிறார். நேகா இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண்களுக்கு பிரச்சினை ஏற்பட, அதில் இருந்து அவர்களை காப்பாற்றும் வர்மன், அந்த பிரச்சினைக்கு காரணமானவர்களை போலிசில் பிடித்துக் கொடுப்பதோடு, சந்தர்ப்ப சூழ்நிலையால், நேகாவை உடனடியாக திருமணம் செய்துக்கொண்டு கோவையில் பலவித கஷ்ட்டங்களை அனுபவித்து பிறகு நல்ல நிலைக்கு வருகிறார்.
அதே சமயம், சொந்தத்தில் பெண் பார்த்து வர்மனுக்கு திருமணம் பேசி முடிக்கும் வேல ராமமூர்த்தியும் அவரது சொந்தங்களும், வர்மனின் காதல் திருமணம் குறித்து அறிந்து கடும்கோபமடைகிறார்கள். இதற்கிடையே, வர்மனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை கொலை செய்யும் முயற்சியில் இறங்க, அவரோ தனது அப்பாவை சந்திக்க மனைவியுடன் பிரான்மலைக்கு செல்ல, அங்கு நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் ‘பிரான்மலை’ படத்தின் மீதிக்கதை.
சமூகத்தில் நடைபெறும் ஆணவக்கொலைகள் குறித்த செய்திகள் பல பத்திரிகைகளில் வெளியானாலும், வெளியே தெரியாமல் நடக்கும் பல ஆணவக்கொலைகள் பற்றியும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றியும் இப்படம் மறைமுகமாக பேசியிருந்தாலும் அழுத்தமாக பேசியிருக்கிறது.
புதுமுகமான ஹீரோ வர்மன், அறிமுக நடிகர் போல் அல்லாமல் கூத்துப்பட்டறை மாணவரைப் போல நடிப்பால் கவனிக்க வைக்கிறார். நடனம், ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல் என்று அனைத்துக் காட்சிகளிலும் நடிப்பில் தேர்ந்தவராக இருப்பவர் பக்கத்து வீட்டு பையனைப் போல இயல்பாக இருப்பதோடு, இயல்பாகவும் நடிக்கிறார். அதிலும், இறுதிக் காட்சியில் தனது மனைவிக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறுவதும், உறவினர்களிடம் கோபம் கொள்ளும் காட்சியிலும் நடிப்பால் கைதட்டல் பெறுகிறார்.
சினேகாவை போல இருக்கும் நாயகி நேகா, அழகாக இருக்கிறார். நடிப்பிலும் அழகிலும் எளிமையாக இருப்பவர், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி தனகே உறித்தான அந்த நேட்டிவிட்டி கம்பீரத்தை இந்த படத்திலும் நூறு சதவீதம் வெளிப்படுத்தியிருப்பவர், என்ன தான் கெளரவம் பார்த்தாலும், தனது மகன் விஷயத்தில் கோபத்திலும் பாசம் காட்டுவது, முதிர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டுகிறது.
காமெடி ஏரியாவில் வலம் வரும் பிளாக் பாண்டியும், கஞ்சா கருப்பும் சிரிக்க வைக்க முயற்சிப்பதோடு, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாகவும் வந்து போகிறாரகள்.
வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு என்று தெரிந்த முகங்களோடு, தெரியாத பல முகங்களும் நடிப்பால் நம்மை கவனிக்க வைக்கிறார்கள். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் பிரான்மலை ஊர் மக்களும், ஹீரோவின் சொந்தங்களும் இயல்பான நடிப்பால் நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார்கள்.
படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில், இசையமைத்திருக்கும் பாரதி விஸ்கார், பாடல்களை புரியும்படி கொடுத்திருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்கும்படியும் கொடுத்திருக்கிறார். வைரமுத்துவின் வரிகளால் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கிறது. அதிலும் அந்த அம்மா பாட்டு வேற லெவல். ரஜினியின் ‘படையப்பா’, கமலின் ‘அவ்வை சண்முகி’ அஜித்தின் ‘வரலாறு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் எஸ்.மூர்த்தி தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பெரிய படங்களில் மட்டும் தான் பணிபுரிவேன், என்றில்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தில் பணியாற்றியிருக்கும் அவரது பங்களிப்பு படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பாலும் படம் பலம் பெற்றுள்ளது.
இயக்குநர் அகரம் கமுரா, தன்னைப் போல, புதியவர்கள் பலரை சேர்த்துக்கொண்டு, தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவே சொல்லியிருக்கிறார்.
ஆணவப்படுகொலையின் தெரியாத பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இப்படம் சாதாரண கமர்ஷியல் படமாக ஆரம்பித்தாலும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, அந்த கிளைமாக்ஸ் காட்சியில், இப்படியும் மனிதர்கள் செய்வார்களா? என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது.
ஹீரோவின் ஊருக்கு மருமகளாக வரும் ஹீரோயின், பிரான்மலை என்ற ஊர் பெயர் பலகை அருகே மண்டியிட்டு, ”நான் பிறந்த ஊர் எது என்பது தெரியாது, ஆனால் இனி என் கணவரது ஊரான இது தான் எனது சொந்த ஊர்” என்று சொல்லும் காட்சியின் மூலம் நம் இதயத்தை வருடும் இப்படம், கிளைமாக்ஸ் காட்சியில் சில கொடூரமான மனிதர்களைக் காட்டி, நம்மை அச்சம் கொள்ளவும் வைக்கிறது.
ஜாதி, மதம் பாகுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுத்தாலும், சமூகத்தில் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கும் இந்த ‘பிரான்மலை’ படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களை தாராளமாக பாராட்டலாம்.
வாரம் நான்கு, ஐந்து படங்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் இறுதி வாரத்தில் எந்த ஒரு படமும் வெளியாகத நிலையில், இப்படம் வெளியாகியிருந்தாலும் சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவே உள்ளது.
பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களால் படத்தில் சில குறைகள் இருந்தாலும், இருப்பதை வைத்துக்கொண்டு மொத்த படக்குழுவினரும் ஒரு நல்ல படத்தை கொடுக்க பணத்துடன் தங்களது கடின உழைப்பையும் செலவிட்டுள்ளதை முழு படமும் வெளிப்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘பிரான்மலை’ படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.
-ஜெ.சுகுமார்