பிரபல பஞ்சாப் பாடகர் கொலை – ஆம் ஆத்மியை டிஸ்மிஸ் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்
பஞ்சாப் மாநில பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இந்நிலையில் நேற்று மான்சா மாவட்டத்தில் அவர் காரில் சென்ற போது சுற்றி வளைத்த மர்ம கும்பல் துப்பாக்கியால் பலமுறை சுட்டது. இதில் அந்த காரில் இருந்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் சித்து மூஸ்வாலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
இந்த கொலைக்கு கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கும்பல் மற்றும் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள காவல்துறை டிஜிபி வி.கே.பாவ்ரா, தெரிவித்துள்ளார்.
சித்து மூஸ்வாலாவுக்கு 4 கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் 2 கமாண்டோக்கள் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
நேற்று காரில் அவர் பயணம் செய்தபோது மீதம் இருந்த 2 கமாண்டோக்களை உடன் அழைத்துச் செல்லவில்லை என்றும் டிஜிபி வி.கே.பாவ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் தலைவரும், திறமையான கலைஞருமான சித்து மூஸ்வாலா கொலையால் தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்து உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என்றும் ராகுல் கூறியுள்ளார்.
இந்நிலையில், சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையே குற்றவாளிகள் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.