நெல்லை டவுனை சேர்ந்தவர். பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார்.
காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன்.
இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார். 77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.