பிரபல இயக்குநர் மீது பரபரப்பு புகார் அளித்த மஞ்சு வாரியர்!

மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். தனுஷ் நடித்துள்ள அசுரன் படித்தில் நடித்து உள்ளார். மஞ்சுவாரியர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். மஞ்சுவாரியரின் தொழில் பங்குதாரராகவும் ஸ்ரீகுமார் மேனன் இருந்து உள்ளார்.

மஞ்சுவாரியர் புகாரில், தனது உயிருக்கு ஆபத்து மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் நிதி பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக கூறி உள்ளார். திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டின் பல்வேறு கட்டங்களில் இயக்குனர் தன்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீகுமார் மேனனின் நடத்தை தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மஞ்சுவாரியரது குற்றச்சாட்டுகளின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டு போலீஸ் டிஜிபி லோக்நாத் பெஹெரா, உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரணை ஒப்படைக்கக்கூடும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மொபைல்போன் உரையாடலின் ஒரு ஆடியோ கிளிப்பிங்கையும் ஆதாரமாக மஞ்சுவாரியர் சமர்ப்பித்து உள்ளார்.

தொழில்துறையில் பணியமர்த்தல் மற்றும் ஊதிய பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட தொழில்துறையில் கூறப்படும் பாலின துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராட 2017 ஆம் ஆண்டில் மலையாள சினிமா பெண்கள் அமைப்பு ஒன்றை மஞ்சுவாரியர் ஏற்படுத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீகுமார் மேனன் சமீபத்தில் மோகன்லால்- மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ஓடியன் படத்தை இயக்கி உள்ளார்.

இதற்கிடையில், ஸ்ரீகுமார் மேனன் தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம், மஞ்சு வாரியர் புகாருக்கு பதில் அளித்து உள்ளார். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்பியபோது மஞ்சு வாரியர் கிடைத்த எல்லா உதவிகளையும் மறந்து விட்டார். “நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வங்கி கணக்கில் ரூ.1,500 மட்டுமே இருப்பதாக நீங்கள் என்னிடம் கூறியிருந்தீர்கள்.

எங்கள் முதல் விளம்பரத்தின் முன் பணமாக நான் உங்களுக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கியபோது, கடவுள் உங்களுக்கு அனுப்பிய தூதர் நான் என்று நீங்கள் அழுதீர்கள். உங்களால் பல முக்கிய நபர்கள் என் எதிரிகளாக மாறினர். நான் ஊடக அறிக்கைகள் மூலமாக மட்டுமே போலீஸில் அளித்த புகார் குறித்து அறிந்து கொண்டேன். விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன்” என கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools