அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரம் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் மாறி மாறி வைக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் பாராளுமன்ற விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் போது துணை அதிபராக இருந்த பைடன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபமடைந்ததாகவும், அக்காலகட்டத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த ஹன்டர் பைடன் தந்தையின் பதவியை ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாகவும், அதை பைடன் தடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் பைடன் மறுத்துள்ளார். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 3 கமிட்டி உருவாக்கப்பட்டு இது குறித்து முன்னரே விசாரணை நடத்த தொடங்கியிருந்தாலும், தற்போதைய வாக்கெடுப்பு வெற்றியினால் அதிகாரபூர்வ விசாரணை நடைபெற வெள்ளை மாளிகை ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விசாரணையை முன்னெடுத்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகள் கேட்கும் ஆவணங்களையும், தரவுகளையும் அது தந்தாக வேண்டும்.
விசாரணைக்கு பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற மேல் சபையான செனட் சபை உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் பைடனுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும். அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விசாரணையின் நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.