நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட மாநில அரசும் இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசு 60 சதவீதம் நிதியை ஒதுக்கும் நிலையில் மீதமுள்ள 40 சதவிகிதத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின்படி 25 சதுர மீட்டர் அல்லது 269 சதுர அடிகள் கொண்ட கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. இதில், ஒரு ஹால், படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பிடம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். வீடு கட்டுவதற்கு 4 தவணைகளாக தொகை விடுவிக்கப்படுகின்றன.
இந்த சூழலில் தமிழ் நாட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், அவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான 365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்ட தற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.