இந்தியாவில் சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், வீர தீர செயல் புரியும் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்நிலையில் இந்த ஆண்டு பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருது பெறும் 29 குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடவுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் அவர்கள் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பிலும் கலந்துகொள்வர்.
பரிசுத்தொகை நேரடியாக குழந்தைகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்குவார். இருப்பினும், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக, விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால் பிரதமர் மோடி விருது பெறுபவர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடவுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.