பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம். இதற்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றுகூடி போராட வேண்டியது அவசியம். பிரதமர் பதவியை நிர்வகிக்கும் தகுதி, திறன் ராகுல் காந்திக்கு உள்ளது. பிரதமர் மோடிக்கு பலமான போட்டியாளர் ராகுல் காந்தி.
பிரதமர் மோடி வெறும் காகித புலி. கடந்த தேர்தலின்போது, மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. வெறும் வாய்ப்பேச்சால் நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.