Tamilசெய்திகள்

பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் – இணை அமைச்சர் முருகன் பேச்சு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இணை மந்திரி எல் முருகன், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மத்திய இணை மந்திரி எல் முருகன், பிரதமர் நரேந்திரமோடி, 2 மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் இருந்து பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என்றும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் முயற்சியால் தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக அவர் கூறினார். நாட்டின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், பழங்குடியினத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி 75 வருடங்களில் நிகழாத சாதனையை பிரதமர் செய்துள்ளார் என்றும், ஐ. நா. சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பிரதமர் பேசியதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தமிழ் மொழியை உலக அரங்கிற்கு பிரதமர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.