X

பிரதமர் மோடி ராகுல் காந்தி இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை, தெலுங்கானா மாநிலத்தை தாண்டி இன்று இரவு 9 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள தெக்லூரை அடைகிறது. அந்த மாநிலத்தில் மட்டும் 14 நாள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதே பாத யாத்திரையின் நோக்கம் என்றார். கடந்த எட்டு ஆண்டுகளில், நாடு ஊழல், பயம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில், ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.