ரஷிய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷியா புறப்பட்டார். ரஷியா செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரஷியாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
ரஷிய அதிபர் புதினுடனான மோடியின் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முக உறவுகள் குறஇத்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள் என்றும், பரஸ்பர ஆர்வமுள்ள சமகால பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்றும், பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரஷியாவில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் சரக்கு கப்பல்களை இயக்க ஆலோசிக்கப்படுகிறது. தற்போது ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு சரக்கு கப்பல்கள் வந்து சேர 40 நாட்கள் ஆகிறது.
அதற்கு பதிலாக ரஷியாவின் விளாடிவாஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் சரக்கு கப்பல்களை இயக்கினால் 20 நாட்களுக்குள் சரக்கு கப்பல்கள் இந்தியாவை வந்தடையும். இதனால் நேரமும், எரிபொருளும் கணிசமாக மிச்சமாகும்.
எனவே சென்னைக்கு புதிய வழித்தடத்தில் சரக்கு கப்பல்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து மருந்து பொருட்கள், ஜவுளி, மின்னணு பொருட்கள், வேளாண் கருவிகளை அதிக அளவில் ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்வது. இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.