மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தமிழர்கள் உள்ள பகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். வாரணாசி தொகுதியில் கடந்த முறை போட்டி இருந்தது.
ஆனால் இந்த முறை யாரும் போட்டியாக கருத முடியாது. ஒட்டு மொத்த மக்களும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அங்குள்ள சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க இருப்பதாக கூறினார்கள். 5 ஆண்டுகளில் மோடி பல திட்டங்களை செய்துள்ளார். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி பேசும் கே.எஸ்.அழகிரியின் பார்வையில் கோளாறு இருப்பதாக தெரிகிறது.
சந்திரசேகரராவை சந்திக்க முதலில் ஸ்டாலின் மறுத்ததாக தகவல் வந்தது. இப்போது சந்தித்து உள்ளார். அப்போது நல்ல டீ குடித்து இருப்பார்கள். அவ்வளவு தான் நடந்து இருக்கும். இதன் பின்னாடி எந்த பலனும் இருக்க போவதில்லை.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது. பா.ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடிய வகையில் பலம் பொருந்திய கட்சியாக வர போகிறது. கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஆட்சி அமைத்ததோ அதுபோல் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.
பா.ஜனதாவிடம் தி.மு.க. சார்பில் தூது அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒருவேளை சந்திரசேகர ராவ் மூலமாக தூது அனுப்பி இருப்பார்.
திரை மறைவில் எதுவும் பேசுவதற்கு பா.ஜனதா தயாராக இல்லை. இதை யார் சொல்லியிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.