பிரதமர் மோடி பற்றிய எனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் – இளையராஜா அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் பிரதமர் மோடி பற்றி புகழ்ந்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இளையராஜா எழுதிய முன்னுரையில்
கூறி இருப்பதாவது:- பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின்
உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி வி‌ஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம்
கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்திற்கு தான் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மோடி பற்றி இளையராஜா கூறிய கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்ப்பு அலை எழுந்திருக்கிறது. அதோடு விவாதங்களும் நடந்து வருகின்றன. இது தொடர்பாக அவரது சகோதரர் கங்கை
அமரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில், “இளையராஜாவிடம் இந்த வி‌ஷயம் குறித்து நான் பேசினேன். அப்போது அவர், “நான் எழுதிய கருத்து
தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எப்படி கருத்து சொல்கிறார்களோ அதே போன்று நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும்,
நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய எண்ணத்தில் மோடி எப்படி இருக்கிறாரோ, அதுவே என் பேச்சில் வந்துள்ளது. பதவி வாங்குவதற்காகவெல்லாம் நான் மோடியை வேண்டுமென்று புகழ்ந்து
பேசவில்லை. சொல்லப்போனால் எனக்கு அப்படியான எந்தப் பதவியும் தேவையில்லை. நான் பாரதிய ஜனதாவிலும் இல்லை. தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும். நான் பல பாட்டுக்கு
இசை அமைக்கிறேன். சில பாட்டு நல்லா இருக்கு என்பார்கள். சில பாடல் நல்லா இல்லை’ என்பார்கள். அதைப் போன்று தான் எனது இந்தக் கருத்தும். இந்த விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனக்கு கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது. மோடியை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதை நான் கூறியுள்ளேன்.

ஒரு புத்தகத்தை கொடுத்து என்னிடம் முன்னுரை எழுத சொன்னார்கள். நான் இரண்டு பேரையும் அலசி ஆராய்ந்து என்னுடைய எண்ணத்தை எழுதினேன். இதற்காக நான் எழுதிய கருத்து தவறு
என்று மன்னிப்பு கேட்க முடியுமா? நான் எழுதியதில் ஏதாவது தவறு இருக்கிறதா? எனக்கு மோடியையும் பிடிக்கும் அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால் இரண்டு பேரையும் ஒப்பிட்டு எனது கருத்தைத்
தெரிவித்தேன்.

என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதை எல்லாம் மோடி செய்து வருகிறார். நான் கூறியது தவறா? மோடியை பற்றியோ அல்லது அம்பேத்கரைப் பற்றியோ நான் தவறாக பேசியிருந்தால், அதைப்
பற்றி விமர்சிக்கையில் அதற்கு நான் பதில் அளிக்க தயார்’ என்று இளையராஜா என்னிடம் கூறினார்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools