பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் – விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அறிவிப்பு
கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த பேரணியில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் ஏராளமான மாணவ, மாணவிகளும் காணப்பட்டனர். அவர்களுடன் ஆசிரியர்களும் சென்றதாக தெரிகிறது.
இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. ஆனால் அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.